நிதி தொடர்பில் இலங்கை தரப்பில் கோரிக்கை எதுவும் முன்வைக்கப்படவில்லை:சர்வதேச நாணய நிதியம்
நிதி நிவாரணத்திற்காக இலங்கை தரப்பில் இருந்து இதுவரை எவ்வித கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அப்படியான கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அது பற்றி பேச்சு நடத்த தயாராக இருப்பதாக நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி மசாஹிரோ நோசாகி (Masahiro Nosaki) தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் இருக்கும் தொழிற்நுட்பட உதவியை பெறுவது தொடர்பான தகவலையே அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த புதன் கிழமை வெளியிட்டதாகவும் அது கடனை பெறுவதற்கான விண்ணப்பம் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
நிதி கொள்கை தொடர்பாக நிதியமைச்சின் ஊழியர்களுக்கு இந்த பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படும்.
எவ்வாறாயினும் இலங்கை பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் தொடர்பாக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் மேற்கொண்ட மீளாய்வு தொடர்பான விடயங்கள் இந்த மாதம் நடைபெறும் பணிப்பாளர் சபைக்கூட்டத்தில் மீண்டும் மீளாய்வு செய்யப்படும் எனவும் மசாஹிரோ நோசாகி குறிப்பிட்டுள்ளார்.