தேசிய மட்டத்தில் மன்னார் மாவட்டம் சாதனை
தேசிய மட்டத்தில் உற்பத்தி திறன் மதிப்பீடுக்கான போட்டியில மன்னார் மாவட்ட செயலகம் மூன்றாம் இடம். கடந்த வருடத்தில் தேசிய மட்டத்தில் நடைபெற்ற அலுவலகத்தின் வினைத்திறனான செயல்பாட்டின் உற்பத்தி திறன் மதிப்பீடுக்கான இவ் போட்டியில் மன்னார் மாவட்ட செயலகம் சாதாரண தரத்திலிருந்து மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான கடமை செயல்பாடுகளை ஆரம்பித்த வைபவ ரீதியான நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...
கடந்த வருடம் தேசிய மட்டத்தில் நடைபெற்ற உற்பத்தி திறன் போட்டி அதாவது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அலுவலகத்தின் வினைத்திறனான செயல்பாட்டின் மதிப்பீடுக்கான இவ் போட்டியில் நாம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளோம். நாம் மூன்றாம் இடத்தை பெற்றிருப்பது எமக்கு சற்று மனச்சஞ்சலம் இருக்கலாம் ஆனால் நாம் இதற்கு முந்திய வருடத்தில் ஒரு சாதாரண தரத்திலே இருந்துள்ளோம்.
இதன் அடுத்தது விஷேட தராதரம் என்று ஒன்று இருக்கின்றது. ஆனால் நாம் கடந்த வருடம் இந்த உற்பத்தி திறன் போட்டியில் சாதாரண தரம் மற்றும் விஷேட திறனைத் தாண்டி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது எமக்கு ஒருவிதமான மகிழ்ச்சிதான்.
இதற்கு தீவிரமாக உழைத்த பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கிரிஷ்ணராசன் அவருடன் இணைந்து எமது செயலக உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு இ.றொபின் ஆகியோருடன் இணைந்து இன்னும் பலர் இவ் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற திடமான செயல்பாட்டிலேயே நாம் தேசிய மட்டத்தில் இந்த வெற்றியை பெற்றுள்ளோம்.
ஆகவே தற்பொழுது நீங்கள் பெற்றுள்ள அனுபவங்கள் மற்றும் உங்கள் திறனைக் கொண்டு இவ் வருடமும் இவ் போட்டியில் மேலும் வெல்லுவோம் என நாம் நம்பிக்கையுடன் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
அத்துடன் கடந்த வருடம் எமது மாவட்டம் விளையாட்டுத் துறையிலும் மாகாண ரீதியிலும் தேசிய மட்டத்திலும் பல சாதனைகளை புரிந்துள்ளது என்பது எமக்கு பொருமையாக இருக்கின்றது இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் எமது விளையாட்டு அதிகாரி அதன் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர் ஒன்றினைந்து செயல்பட்டதே இதற்கு முதல் காரணமாகும்.
இதன் காரணமாக எமது மாவட்ட வீரர்கள் வீராங்கணைகளை தேசிய மட்டம் வரைக்கும் இவர்கள் கொண்டு சென்றுள்ளனர் என்பது இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களாவர் என இவ்வாறு தெரிவித்தார்.