திடீரென காணாமல் போன லாக்டவுன்; 3 நாட்களுக்கு பிறகு மீட்பு!
சென்னையில் 1 1/2 வயதான லாக்டவுன் எனும் பெயர்கொண்ட குழந்தை காணாமல்போன நிலையில் 3 நாட்களின் பின்னர் மீட்கப்படுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிஷோர். இவரது மனைவி புத்தினி. இவர்களுக்கு ஆகாஷ் (8), பிரகாஷ் (6), துர்கி (5) மற்றும் லாக்டவுன் என்ற 1 1/2 வயது குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சென்னை அம்பத்தூர் பகுதியில் கட்டுமான வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 6 ஆம் திகதி கணவன் - மனைவி இருவரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் தங்கியிருந்த ஷெட்டுக்குள் கட்டிலில் படுத்திருந்த குழந்தை லாக்டவுன் காணாமல்போயுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் , சம்பவம் குறித்து அம்பத்தூர் பொலிசில் புகார் அளித்த நிலையில், மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு 11மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சேலத்திற்கு புறப்பட தயாராக இருந்த பஸ்சில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. அங்கிருந்த பயணிகள் சிலர், அது குறித்து பஸ் நிலைய பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து சென்று குழந்தையை மீட்டனர்.
விசாரணையில், அது, அம்பத்தூரில் மாயமான வடமாநில தொழிலாளி கிஷோரின் குழந்தை லாக்டவுன் என்பது தெரியவந்தது. அதன்பின்னர் குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் பொலிஸாருக்கு பயந்து பஸ்ஸில் குழந்தையை வைத்துவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.