ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கூட்டு கடிதம்; யாழில் ஒன்றுகூடும் தமிழ் தேசிய கட்சிகள்
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, தமிழ் மககள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பல்வேறு திட்டமிட்ட இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான ஆவணமொன்றை தமிழ் தேசிய கட்சிகள் தயாரித்து வருகின்றன.
இந்த ஆவணம் அடுத்துவரும் சில நாட்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், அதன் உறுப்பு நாடுகளிற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்படவுள்ள ஆவணத்தை இறுதிசெய்வதற்காக தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் வரும் 16ஆம் திகதி யாழில் ஒன்றுகூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் உப்புச்சப்பற்ற நடவடிக்கைகள், தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள், தமிழ் அரசியல் கைதிகள், ஐ.நா தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாமை, பொறுப்புக்கூறாமை உள்ளிட்ட பல விவகாரங்களை உள்ளடக்கியதாக விரிவான ஆவணமொன்றை தமிழ் கட்சிகள் தயாரித்து வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்த ஆவண தயாரிப்பு முயற்சியில் தமிழ் கட்சிகள் சார்பில் க.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளதாகவும், வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி, ஆவணத்தை இறுதி செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் தேசியகூட்டணியிலுள்ள அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும், ஆவணம் அன்றைய தினமே இறுதியானால், அதில் கையொப்பமிட்டு, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அதேவேளை 16ஆம் திகதி தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் யாழில் அரசியல் கருத்தரங்கம் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக கூறப்படுக் நிலையில், அதற்கு முன்னதாக கட்சித் தலைவர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.