யாழில் வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்டதால் பெண் உயிரிழந்த விவகாரம்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு
யாழ்ப்பாணம் நெல்லியடி தனியார் வைத்தியசாலையில், பெண்ணின் வயிற்றிற்குள் மருந்து கட்டும் துண்டை வைத்து தைத்த விவகாரத்தில், எதிர்வரும் 25ஆம் திகதி கட்டளை பிறப்பிப்பதாக பருத்தித்துறை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது, பெண்ணின் வயிற்றிற்குள் மருந்து கட்டும் துண்டை வைத்து தைத்ததனால் அப் பெண் உயிரிழந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போதே, மேற்படி அறிவித்தலை நீதவான் விடுத்தார்.
சம்பவத்தில் கரவெட்டி, யார்க்கரு பகுதியை சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (60) என்ற பெண், கர்ப்பப்பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது கர்ப்பப்பையை அகற்றுமாறு வைத்திய ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து , கடந்த டிசம்பர் 10ஆம் திகதி நெல்லியடி, முடக்காடு பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அங்கு சிகிச்சையின் பின் வீடு திரும்பிய பெண், நோய்வாய்ப்பட்டதையடுத்து, பிரித்தானியாவிலுள்ள அவரது மகளும் நாடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்திருந்ததால், 11ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அன்று இரவே அவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, உடலுக்குள் மருந்து கட்ட பயன்படுத்தப்படும் துண்டு காணப்பட்டது.
50 செ.மீ நீளமும், 10 செ.மீ அகலமும் கொண்ட அந்த துண்டு, அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக உடலுக்குள் வைத்து தைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. அந்த துண்டு இருந்த பகுதியில் குடல் பழுதடைந்ததாக கூறப்படும் நிலையில், அந்த துண்டினால் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாகவே, அபெ பெண் உயிரிழந்தார் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, பிரேத பரிசோதனை முடிந்ததும், சட்டவைத்திய அதிகாரி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்திருந்த நிலையில், உறவினர்கள் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை மேற்கொண்ட போது, நெல்லியடி பொலிசார் அங்கு சென்று, இறுதிச்சடங்கை தாமதப்படுத்தும்படி அறிவித்தனர்.
அத்துடன், பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு விடயத்தை அறிவித்த நிலையில் பருத்தித்துறை நீதிவான் சென்று சடலத்தை பார்வையிட்டார். இதனையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட வைத்திய அதிகாரி, பெண்னிற்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட வைத்தியசாலை உரிமையாளரை கடந்த 13ஆம் திகதி மன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட பின்னர், குறித்த தனியார் வைத்தியசாலைக்கு நீதிவான் சென்று பார்வையிட்டார். இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலை 3 இலட்சம் ரூபாவி;ற்கும் அதிகமான பணத்தை கட்டணமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் மருத்துவர்களின் அசண்டையீனத்தால் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.