கணவனை கொடூரமாக கொலை செய்து 7 ஆவது மாடியில் இருந்து வீசிய மனைவி!
மும்பையில் தனது கணவனை கொலை செய்துவிட்டு 7 மாடியில் இருந்து மனைவி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சம்பவம் குறித்து தெரியவருவது, மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அம்போலி பகுதியை சேர்ந்தவர் சாந்தனுகிருஷ்ண சேஷாத்ரி (54). தனியார் நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவரது மனைவி ஜெய்ஷீலா, மகன் அரவிந்த் (26). பொறியல் பட்டதாரி. இந்நிலையில், சேஷாத்ரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இச் சம்பவம் குறித்து பொலிஸார், சேஷத்ரியின் மனைவி மற்றும் மகனிடம் விசாரணை நடத்தினர். அதில் சேஷாத்ரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாகவும், இதற்கு முன்பு கூட அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்களது வீட்டிலும் நடத்திய சோதனையில், வாஷிங் மிஷினில் சேஷாத்ரியின் சட்டை ஒன்று ரத்தக் கறையுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் ஜெய்ஷீலா மற்றும் அரவிந்திடம் நடத்திய குறுக்கு விசாரணையில், இருவரும் சேஷாத்ரியை கொலை செய்துவிட்டு உடலை மாடியில் இருந்து தூக்கி எறிந்தது தெரியவந்தது.
மேலும், சேஷாத்ரிக்கும் மனைவி மற்றும் மகனுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் நேற்று முன்தினம் வியாக்கிழமை (10-02-2022) அதிகாலை 4 மணியளவில் சேஷாத்ரியின் தலையை கட்டிலில் முட்டி பலமாக தாக்கி உள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த சேஷாத்ரி மூச்சில்லாமல் இருந்துள்ளார். இதனால், பயந்துப்போன ஜெய்ஷீலா மற்றும் அரவிந்த் சேஷாத்ரி உடலை 7-வது மாடியில் இருந்து தூக்கி வீசி தடயத்தை அழிக்க முயன்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக சேஷாத்ரியின் மனைவி மற்றும் மகனை பொலிஸார் கைது செய்தனர். கொலை வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.