நயினாதீவு தொடர்பில் பிரதமர் மகிந்த விடுத்த முக்கிய அறிவிப்பு
இம்முறை அரச வெசாக் விழாவிற்கு முன்னதாக நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
2022 அரச வெசாக் விழாவை இம்முறை பலங்கொட கூரகல வரலாற்று சிறப்புமிக்க தலத்தை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது.
நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலுக் கூறுகையில்,
கடந்த ஆண்டு அரச வெசாக் விழாவினை வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரையில் நடத்துவதற்கு நாம் தீர்மானித்திருந்தோம்.
ஆனால் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார பிரிவின் ஆலோசனைக்கேற்ப பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கு கொண்டு அரச வெசாக் விழாவினை நடத்த முடியாது போனது.
இம்முறை அரச வெசாக் விழாவிற்கு முன்னதாக நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரத்தை வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை காலம் தாமதிக்காது முன்னெடுக்குமாறு பிரதமர் அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் குறிப்பிட்டார்.
கூரகல வரலாற்று சிறப்புமிக்க தலத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் அரச வெசாக் விழாவுடன், கூரகல வரலாற்று சிறப்புமிக்க தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்துமாறு பிரதமர் தெரிவித்தார்.
அரச வெசாக் விழாவை முன்னிட்டு வெசாக் பக்தி பாடல் நிகழ்வு, தன்சல், வெசாக் அலங்கார கூடு போட்டி, சூழல் பாதுகாப்பு நிகழ்வுகள், விசேட சமய நிகழ்வுகள், கலாசார நிகழ்வுகளை நடத்துவது மற்றும் விகாரை, அறநெறி பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இம்முறை அரச வெசாக் விழாவை முன்னிட்டு கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் வெசாக் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது குறித்து கவனம் செலுத்துமாறும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
கூரகல புண்ணிய தலம் அமைந்துள்ள பலங்கொட மற்றும் கல்தொட பிரதேசங்களை அண்மித்த பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்திய பிரதமர், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இம்முறை வெசாக் விழாவினை சுகாதார துறையினரின் ஆலோசனைக்கேற்ப நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மேற்கொள்வோம்.
சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டம் என்பது விசேடமாக மரக்கன்றுகளை பகிர்ந்தளிப்பது மாத்திரமல்ல. அந்த மரக்கன்றுகள் முறையாக பாதுகாக்கப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆராயுமாறு பிரதமர் மகிந்த இதன்போது மேலும் குறிப்பிட்டார்.