இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்; புறப்பட்டது மற்றுமொரு கப்பல்!
இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பிவைக்க சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த பிரேரணை அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி இந்தியா ரூபாவில் 80 கோடி மதிப்பிலான 40,000 மெட்ரிக் தொன் அரிசி, ரூ28 கோடி மதிப்பிலான 50 மெட்ரிக் தொன் பால்மா, ரூ.28 கோடி மதிப்பிலான137 வகையான மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன்படி சென்னைத் துறைமுகத்திலிருந்து முதற்கட்டமாக கடந்த மாதம் 18 ஆம் திகதி கப்பல் மூலம் 9,500 தொன் அரிசி, 200 தொன் பால் மா, 30 தொன் அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக நாட்டில் சிரமத்தை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இரண்டவது கட்ட நிவாரணப் பொருட்களுடன், இன்று தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு கப்பலொன்று புறப்பட்டுள்ளது.

கப்பலில் 14,700 தொன் அரிசி, 250 தொன் பால்மா, 50 தொன் மருந்து பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் தொடர்ந்து மீதமுள்ள அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் அடுத்த சில தினங்களில் மற்றொரு கப்பல் மூலம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.