இலங்கையரை தொடர்ந்து பாகிஸ்தானில் அரங்கேறிய மற்றுமொரு பகீர் சம்பவம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மத நிந்தனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் வன்முறைக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிச்ர்ரியினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் குர் ஆனை தீயிட்டுக் கொளுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரை வன்முறைக் கும்பலொன்று கொலை செய்துள்ளது. பிரார்த்தனைக் குழுவின் தலைவரின் மகன் ஒருவர், நபர் ஒருவர் குர் ஆனை தீயிட்டுக் கொளுத்தினார் என தெரிவித்ததைத் தொடர்ந்து மசூதியில் திரண்டவர்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம் அறித்த பொலிஸார் அந்தப் பகுதிக்குச் சென்ற வேளை மரத்தில் கட்டப்பட்ட நிலையில் சுயநினைவின்றி காணப்பட்ட நபர் ஒருவரை பார்த்துள்ளனர். இந்நிலையில் பொலிஸார் மீதும் அங்கு காணப்பட்ட கும்பல் தாக்குதலை மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தடிகள், கோடரிகள், இரும்புக் கம்பிகள் போன்றவற்றால் அவரைத் தாக்கி கொலை செய்தனர் என பொலிஸ் அதிகாரி முனாவர் ஹூசைன் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
அதேசமயம் கொல்லப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க முகமட் முஸ்டாக் மனோநிலை பாதிக்கப்பட்டவர் போல தோன்றுகின்றது என பொலிஸார் தெரிவித் துள்ளனர். கொல்லப்பட்ட நபர் பத்து பதினைந்து வருடங்களாக மனேநிலை பாதிக்கப்பட்டவர் என குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதமர் இம்ரான்கானின் விசேட பிரதிநிதி தஹீர் அஸ்ரபி தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,-85பேரை தடுத்து வைத்துள்ளோம், தேடுதல்கள் இடம்பெறுகின்றதாகவும் பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வன்முறை கும்பலுக்கு எதிராகவும் வன்முறை இடம்பெறுவதை பார்த்துக் கொண்டிருந்த வர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த அவர், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தினை கடுமையாக பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை அண்மையில் பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மத நிந்தனை செய்ததாக கூறி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.