முதுகெலும்பிருந்தால் வெளியேறுங்கள்; முக்கிய அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்ட சவால்
அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு முதுகெலும்பிருக்கும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக அரசியலிருந்து வெளியேற வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சவால் விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனகூறுகையில்,
அரசுக்குள் இருந்துக்கொண்டு, அரசை பாதுகாக்கும் விதத்திலான அரசியலையே மேற்படி தரப்புகள் முன்னெடுத்துவருகின்றன. ஆனால் தாங்கள் எதிர்ப்பாளர்கள் என்ற விம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு அந்த தரப்புகள் முற்படுகின்றன.
அவர்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்கமாட்டோம் என விமல், வாசு, கம்மன்பில உள்ளிட்டவர்கள் சூளுரைத்த நிலையில், மேற்கு முனையம் வழங்கப்படும்போது மௌனம் காத்தனர்.
ஆரம்பத்தில் போர்ற் சிற்றி சட்டமூலத்துக்கு போர்க்கொடி தூக்கினர். இறுதியில் இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு நல்கினர். அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்படும்போது, அமெரிக்க பிரஜை நாடாளுமன்றம் வர இடமளியோம் என மார்தட்டினர்.
ஆனால் பஸில் நாடாளுமன்றம் வந்தார். நிதி அமைச்சர் ஆனார். 20 இற்கு எதிர்ப்பை வெளியிட்டவர்களே அதனை ஆதரித்தனர். அதேபோல யுகதனவி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு, ஆனால் அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு பாதீட்டை ஆதரித்து வாக்களிக்கின்றனர்.
எனவே இவர்கள் முதுகெலும்பிருந்தால் அரசியிலிருந்து வெளியேறுமாறு சவால் விடுப்பதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறினார்.