மூன்று நாட்களே தாக்குப் பிடிக்கும்! கையை விரித்தார் அமைச்சர்
நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை வரை மின்சாரம் தடையின்றி பேணப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் லொக்குகே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் நாளைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும், ஜனவரி 22 ஆம் திகதி வரை தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான எரிபொருளை வழங்குமாறு பெற்றோலிய கூட்டுத்தானத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாளைய கலந்துரையாடலில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெளிவான பதிலை வழங்கத் தவறினால் மின்சாரம் வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
களனிதிஸ்ஸ மின் நிலையத்திற்கு 3,000 மெட்ரிக் தொன் உலை எண்ணெய் கிடைத்துள்ளது, இது செவ்வாய்கிழமை வரை தடையில்லா மின்சாரம் வழங்க உதவும். அமைச்சர் உதய கம்மன்பில கூறியது போல் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டிய 80-90 பில்லியன் ரூபா தற்போதைய நிர்வாகத்தின் போது ஏற்படவில்லை என்றும் அது நல்லாட்சி அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டதாகும் என்றும் அமைச்சர் லொக்குகே கூறினார்.
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது இலங்கை மின்சார சபை மின்சாரத்தில் சலுகைகளை வழங்கியது, இதன் விளைவாக ரூ.44 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், காலதாமதமான கொடுப்பனவுகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்று அலகுகளில் தலா 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், மேலும் ஒரு ஜெனரேட்டர் பழுதடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஜனவரி 22ஆம் திகதிக்குள் ஜெனரேட்டர் செயல்படத் தொடங்கும் என்று பொறியாளர்கள் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
சமனலவெவ நீர் மின்சாரத் திட்டம் மற்றும் விக்டோரியா நீர்மின் நிலையம் என்பன தற்போதைய வரட்சி காரணமாக பாவனைக்காக திருப்பி விடப்பட்டுள்ள நீர் விநியோகத்தினால் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக அமைச்சர் லொக்குகே தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை நீங்கும் வரை தொடர்ந்து தண்ணீர் வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் வகையில் கடந்த வாரம் அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டார்.