தளபதி விஜய் மகன் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த துருவ் விக்ரம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மகான்.
விக்ரம் நடிப்பில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இன்று வெளியாகிறது. இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்த படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர். படக்குழுவினருடன் கலந்து கொண்ட துருவ், பத்திரிகையாளர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் பதிலளித்தார்.
அதில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உடனான நட்பு குறித்து துருவிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அவர் விஜய்யின் மகன் சஞ்சய் சிறுவயதில் இருந்தே எனக்கு சிறந்த நண்பர். ஒரு நல்ல கதையை அவர் இயக்கினால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். கண்டிப்பாக இரு நட்சத்திரங்களின் வாரிசுகள் இணையும் படமாக இது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மகான் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பற்றி துருவ் பேசி இருப்பது ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சஞ்சய்க்கு அப்பாவைப் போல் நடிப்பதில் விருப்பம் இல்லை என்றும், ஆனால் அவர் இயக்குவதில் ஆர்வம் காட்டுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் துருவ் சொன்னவுடன் சஞ்சய் ஒரு படத்தை இயக்க தயாராகிவிட்டதாக தெரிகிறது. மேலும் இருவரும் இணைந்தால் படம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.