கனடாவில் பலியான குடும்பம் குறித்து உறவினர் வெளியிட்ட உருக்கமான பதிவு!
கனடா அமெரிக்க எல்லையில், பனியில் உறைந்து பலியான இந்தியக் குடும்பத்தின் இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (06-02-2022) இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிற்கு செல்லும் ஆசையில், கனடாவில் இருந்து நடந்தே அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற இந்தியாவின் குஜராத் மாநிலம் Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33) பிள்ளைகள் விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் சென்ற மாதம் உயிரற்ற உடல்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அதிர்வலைகளை உருவாக்கியது.

இந்த நிலையில், ஜகதீஷ் குடும்பத்தின் இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (06-02-2022) அமைதியாக வின்னிபெக்கில் நடைபெற்றுள்ளது.
குறித்த இறுதிச்சடங்கில் இந்தியாவில் இருந்தும் அமெரிக்காவிலிருந்தும் வந்த 11 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வின்னிபெக்கில் வாழும் மூன்று பேர் அந்த கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, இந்த இறுதிச்சடங்கை மற்ற உறவினர்களும் நண்பர்களும் பார்க்கும் வகையில் நேரலையில் ஒளிபரப்பும் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நான் பங்கேற்றதிலேயே மிகவும் சோகமான இறுதிச்சடங்கு இதுதான் என வின்னிபெக்கில் வாழும் Bhadresh Bhatt.என்ற உறவினர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு, இப்படிப்பட்ட ஒரு சோக சூழலில் இறுதிச்சடங்கு நடத்தப்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக Bhadresh Bhatt. கூறியுள்ளார்.
இறுதிச்சடங்கைத் தொடர்ந்து, இந்தியாவில் ஜகதீஷ் குடும்பத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமானோர் நேற்றைய தினம் திங்கட்கிழமை (07-02-2022) கூடி ஜகதீஷ் குடும்பத்தினரை நினைவுகூரும் வகையில் ஞாபகார்த்த நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்கள்.
இதற்கிடையில், ஜகதீஷ் குடும்பத்தினரை அமெரிக்காவுக்கு அனுப்பியதின் பின்னணியில் உள்ளது யார் என்பதைத் தெரிவிக்க அவரது குடும்பத்தினர் தயக்கம் காட்டி வருகின்றனர். அது தொடர்பான விசாரணை இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.