பெண்ணொருவரின் மோசமான செயல்; பிள்ளைகளுடன் சிக்கினார்!
கையடக்கத் தொலைபேசி கடையொன்றிலிருந்து 158,000 ரூபா பெறுமதியான 6 கைத்தொலைபேசிகள் மற்றும் டோர்ச்லைட் என்பவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் 37 வயதுடைய பெண்ணும் அவரது இரண்டு பிள்ளைகளும் மொனராகலை பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த சம்பவம் பிபில பஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள கடையொன்றில் இடம்பெற்றதாக கூறப்[படுகின்றது சம்பவத்தின்போது சந்தேக நபர்களால் திருடப்பட்ட 6 கைத் தொலைபேசிகள் மற்றும் ஒரு டோர்ச்லைட் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன் கைதான தாயும் இரு பிள்ளைகளும் மொனராகலை நக்கல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருகையில்,
குறித்த கடையின் உரிமையாளர் கடையை விட்டு வெளியேறிய போது, சந்தேக நபரின் குடும்பத்தினர் கையடக்கத் தொலைபேசியின் சிம் கார்டைச் சரிபார்க்கும் சாக்கில் கடைக்குள் நுழைந்துள்ளனர்.
அதன்போது அங்கிருந்த விற்பனை உதவியாளரிடம் இரகசியமாக இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தக் கொள்ளை ச்சம்பவம் சி. சி. டி. வி கமெராவில் பதிவாகியுள்ளது.
அதேவேளை தாயும் இரண்டு பிள்ளைகளும் அப்பகுதியிலுள்ள கடைகளில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குடும்பம் என பொலிஸாரால் அடையாளம் காணப் பட்டுள்ளது.
அத்துடன் இதற்கு முன்னர் பிபில மற்றும் மெதகம ஆகிய இரு கைத் தொலைபேசி விற்பனை நிலையங்களில் அவர்கள் கைத் தொலைபேசிகளைத் திருடியதாகவும் பின்னர் அவற்றை பணத்துக்கு விற்பனை செய்ததாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளம் பெண் இந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற வுள்ளதாகவும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எட்டு 'ஏ' பெறுபேற்றுடன் சித்தியடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் கைதான பெண்ணின் சகோதரரும் க.பொ.த சாதாரண தரத்தில் 07 ஏ பெறுபேற்றை பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.