யாழில் பயணிகளிடம் தவிச்ச முயலடிக்கும் ஆட்டோ சாரதிகள்!
பொதுவாகவே கொழும்பிலுள்ள ஆட்டோ கட்டணத்தை விட , யாழ்ப்பாணத்தில் சற்றுக்கூடுதலாக இருக்கும் நிலையில், யாழில் உள்ள ஆட்டோ சாரதிகள் சிலர் பயணிகளிடம் தவிச்சமுயலடிக்கும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாக பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் யாழ். நகர பஸ் தரிப்பிடத்தி லிருந்து யாழ். ரயில்வே நிலையம் செல்வதற்கு ஓர் ஆட்டோ ஓட்டுநர் 200 ரூபா கட்டணம் அறவிட்டதாக பயணி ஒருவர் மன குமுறுகின்றார். இத்தூர இடைவெளி 1 கி.மீ. உள்ளே தான் வரும். 200 ரூபா கூடவாக உள்ளதே...? என்றதற்கு “வழக்கமா 150 இப்ப பெற்றோல் விலை கூட அதுதான் 200 ரூபா” எனக் காரணம் கூறினாராம் அந்த சாரதி.
அதேபோல யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி முன்பிருந்து மாட்டின் வீதி ஆரம்பம் வரையான தூரம் அதுவும் 1 கி.மீற்றருக்கு உள்ளே தான் இருக்கும். அதற்கு 150 ரூபா அறவிட்டார் மற்றுமொரு ஆட்டோ சாரதி.
அத்துடன் யாழ். பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஈச்சமோட்டை செல்வதற்கு 250 ரூபா கட்டணம் அறவிட்டார் மற்றுமோர் சாரதி. முன்னர் 200, இப்போ பெற்றோல் விலை கூட அதனால் 250 ரூபா என்கிறார். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான தன்னிச்சையாக கட்டணங்களை அதிகரிக்கலாம் என்பதாலேயே அங்குள்ள முச்சக்கர வண்டிச்சாரதிகள் மீற்றர் பொருத்துவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவற்றை யாழ்ப்பாணச் முச்சக்கர வண்டி சங்கம் தட்டிக்கேட்பதில்லை என கூறப்படும் அதேவேளை பயணிகள் யாரும் முறையிடுவதாகவும் இல்லை எனவும் கூறப்படுகின்றது. ஏனெனில் யாழ். மக்கள் பொதுவாக சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் வைத்திருப்பதால் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.
ஆனால் வேறு மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் செல்வோரே இவ்வாறான கட்டணத்தில் கொள்ளையடிப்போரிடம் சிக்கிக்கொள்கின்றனர்.
நாட்டில் தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அவஸ்தைப்படும் மக்களுக்கு முச்சக்கரவண்டி ஓட்டுநர்களும் இவ்வாறு கட்டணங்களை இஷ்டம் போல் அதிகரிப்பது ‘பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதை’ போல் உள்ளது.
எனவே யாழிலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்பதே தீர்வாக இருக்கும் என்கிறார் பாதிக்கப்பட்ட பயணி ஒருவர்.