யாழில் பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் சட்டத்தரணிகள் மீது தாக்குதல்!
யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் மற்றும் சில சட்டத்தரணிகள் மீது இனம் தெரியாதவர்கள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இணுவில் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் ஐவர் அடங்கிய குழுவினர் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பத்தின்போது சட்டத்தரணிகளுடன் மல்லாகம் நீதிமன்ற முதலியாரும் உடன் இருந்ததாகவும், எனினும் அவர் மீது தாக்குதல் இடம்பெறவில்லை எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறியுள்ளனர்.
அதேசமயம் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போதிலும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் சட்டத்தரணிகள் மீதான தாக்குதலுக்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.