மாஜி மந்திரிகள் மற்றும் மனைவியருக்கு 245 பேர் பாதுகாப்பு!
முன்னாள் உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், பிக்குகள், உயிரிழந்த சில அரசியல்வாதிகளின் மனைவிமாரின் பாதுகாப்புக்காக அமைச்சர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகள் (M.S.D) 245 பேர் காணப்படுவதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குவதற்காக அரசாங்கத்துக்கு வருடாந்தம் 150 மில்லியன் ரூபாய் செலவாவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளவர்களுள் தேர்தல்களில் தோல்வியடைந்த அமைச்சர், உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் மனைவிமாருக்கு வழங்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது பாதுகாப்பு பிரிவின் நடவடிக்கைகளுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக வெளிநாட்டு பிரமுகர்கள் இலங்கைக்கு வருகை தரும் போது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதி்ல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவிக்கு 17 பாதுகாப்பு அதிகாரிகளும் மறைந்த முன்னாள் சபாநாயகர் ஒருவரின் மனைவிக்கு இரண்டு அதிகாரிகளும் கொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஒருவரின் மனைவிக்கு இரண்டு அதிகாரிளும் பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து நிதி மோசடி செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரிக்கு இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் பிக்குத் தலைவர்களின் பாதுகாப்புக்காக பிரபுக்களின் பாதுகாப்பு அதிகாரிகள் 38 பேர் கடமைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் பாரிய நிதி நெருக்கடிக்கு மத்தியில் பாதுகாப்பு தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் இல்லாதவர்களுக்கு இவ்வாறு பாதுகாப்பை வழங்கி நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் அதில் குற்றம் மத்தப்பட்டுள்ளது.